கையும் களவுமாக மாட்டிக்கொண்ட போலீஸ்..! லஞ்சப் பணத்துடன் சிக்கினார் காவல் ஆய்வாளர்..!(வீடியோ)

31 January 2020, 10:22 am
Quick Share

ராமநாதபுரம்: பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் ராஜராஜன் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடிப்பட்டு உள்ளார். காவல் ஆய்வாளர் ராஜராஜன் பிடிபட்ட நிலையில் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே மேலகுடியிருப்பு பகுதியில் குடும்பத்தில் பிரச்னை காரணமாக உறவினர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தங்கவேல் என்பவரின் மனைவி உட்பட 3 பெண்களை, வழக்கில் இருந்து விடுவிக்க, ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுக்குமாறு பார்த்திபனூர் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த தங்கவேல், ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்ததாகவும், மீதி ரூ.5 ஆயிரத்தை தருமாறு இன்ஸ்பெக்டர் ராஜராஜன் அடிக்கடி தொந்தரவு செய்ததால், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தங்கவேல் புகார் தெரிவித்து உள்ளார்.

அவர்களின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் நேற்று கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் ராஜராஜனை கைது செய்து உள்ளனர். இதை அறிந்த சமூக ஆர்வலர் செல்வராஜ், போலீஸ் நிலைய வாசலில் தேங்காய் உடைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நன்றி கூறினார்.