கைது செய்ய போன இடத்தில் கடி வாங்கிய போலீஸ் எஸ்ஐ : கடித்தது நாலு கால் நாய் அல்ல.. அரசு மருத்துவமனையில் அனுமதி…!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 9:13 pm
Accused Bite Police Hand - Updatenews360
Quick Share

பல்லடத்தில் கைது செய்ய போன இடத்தில் கடி வாங்கிய எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாராம் என்ற பாபா பஹ்ரூதீன். இவருக்கு நவ்பியா பர்வின் என்கிற மனைவியும் கபீர் அகமது என்கிற ஆண் மற்றும் தவுளத் பேகம் என்கிற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் பாபா பஹ்ரூதீனுக்கும் மனைவி நவ்பியா பர்வின் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே மனைவி நவ்பியா பர்வின் மாணிக்காபுரம் சாலையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜாராம் என்ற பாபா பஹ்ரூதீன் மனைவி வேலை செய்யும் பனியன் நிறுவனத்திற்கு சென்று மேலாளர் சஞ்சய் குமாரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பனியன் நிறுவன மேலாளர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற பல்லடம் போலீசார் பாபா பஹ்ரூதீன் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்நிலையில் பாபா பஹ்ரூதீன் பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம் பாளையத்தில் இருப்பதாக தகவல் தெரிந்ததை அடுத்து அவரை கைது செய்ய பல்லடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

போலீசார் வருவதை அறிந்து ஆறுமுத்தாம்பாளையம்ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து பல்லடம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கைது நடவடிக்கையில் ஈடுபடும் போது திடீரென யாரும் எதிர்பாரத விதமாக பாபா பஹ்ரூதீன் உதவி ஆய்வாளர் கையை பிடித்து கடித்துள்ளார்.

இதனால் உதவி ஆய்வாளர் கையில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பாபா பஹ்ரூதீனை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது நடவடிக்கையில் ஈடுபட வந்த உதவி ஆய்வாளரின் கையை குற்றவாளி கடுமையாக கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 471

0

0