சிபாரிசுக்கு வந்த திமுக நிர்வாகியிடம் கேள்வி கேட்ட எஸ்.ஐ.: ஒரே இரவில் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

11 May 2021, 7:37 pm
thanjai police - updatenews360
Quick Share

ஆவணமில்லாத சரக்கு வாகனத்திற்கு அபராதம் விதித்ததோடு, திமுக நிர்வாகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தஞ்சை நகர காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரேனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 29 ஆயிரம் பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 1.52 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்தியாசிய தேவைகளுக்கு தவிர்த்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மளிகை உள்ளிட்ட கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. எஞ்சிய கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா ஊடங்கை கடைபிடிக்காமல் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சாலைகளில் சுற்றித் திரிந்து வந்தனர். அவர்களை தடுத்து போலீசாரும் உரிய அபராதம் விதிப்பதுடன், அறிவுரையும் கூறி அனுப்பி வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், தஞ்சை அண்ணா சாலையில் ஆவணங்கள் ஏதும் இன்றி வந்த சரக்கு வாகனத்தை காவல் ஆய்வாளர் மோகன் தடுத்து நிறுத்தி, ரூ.200 அபராதம் கட்டுமாறு கூறினார். ஆனால், அந்த சரக்கு வாகன ஓட்டுநர், தஞ்சை நகர திமுக நகர செயலாளர் நீலகண்டனை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அங்கு ஆதரவாளர்களுடன் வந்த திமுக நிர்வாகி, போலீசாரை மிரட்டி வாகனத்தை விடுவிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு போலீசார் மறுத்ததால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, உதவி ஆய்வாளர் மோகன், “இதற்கு எல்லாம் சிபாரிசு செய்து வருகிறீர்களே… 2 மாதமாக எங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது. அதற்கு எல்லாம் ஏன் வரவில்லை,” என திமுக நிர்வாகியை பார்த்து கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், உதவி ஆய்வாளர் மோகன், ஒரே இரவில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் கடமையை கண்ணும் கருத்துமாக செய்யும் போலீசாருக்கு இது போன்ற பணிமாறுதலை அரசு பிறப்பித்தால், முழு ஊரடங்கை எப்படி சாத்தியப்படுத்தப்படும் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Views: - 351

0

2