எம்.பி வசந்த குமார் மறைவு.., தலைவர்கள் இரங்கல்..!

29 August 2020, 9:32 am
Quick Share

எம்.பி வசந்த குமார் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , காங்கிரஸ் எம்.பி வசந்த குமார் நேற்றிரவு காலமானார்.

அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசியலிலும், வர்த்தக உலகிலும் தனது பெயரை நிலை நாட்டியவர் வசந்தகுமார் என குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”மக்களவை உறுப்பினரான எச்.வசந்தகுமாரின் மறைவு வருத்தமளிக்கிறது. வணிகம் மற்றும் சமூக சேவையில் வசந்தகுமாரின் பங்கு மிகப்பெரியது. தமிழகத்தை முன்னேற்றமடையச் செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் அவருடனான கலந்துரையாடலில் தெரிந்தது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல்,தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.பி வசந்த குமார் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில், “ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றிய குமரி தொகுதி MP திரு.H.வசந்தகுமார் அவர்களின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு. திரு.H.வசந்தகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.!” என தெரிவித்துள்ளார்.

இவர்கள் மட்டும் இன்றி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா ஆளுநரும் எம்.பி வசந்த குமாரின் அண்ணன் மகளுமான தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், எம்.பி வசந்த குமாரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 47

0

0