புதுச்சேரியில் ஜன.,31ம் தேதி வரை மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீட்டிப்பு
1 December 2020, 11:21 amபுதுச்சேரி : புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனுப்பிய கோப்பிற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தர மறுப்பு தெரிவித்துள்ளதால், வரும் ஜனவரி 31ம் வரை மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட போது, ஜூன் மாதம் முதல் புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. அப்போது, தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குள் குடிமகன் வருகையை தடுப்பதற்காக, புதுச்சேரியில் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்கள் விலை இருப்பதற்காக மதுபானங்கள் மீது கொரோனா வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி உயர்வு முதலில் மூன்று மாதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த வரியை அரசு நீட்டிப்பு செய்தது. இந்நிலையில், நேற்றுடன் இந்த வரி விதிப்பிற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கொலோனா வரியை ரத்து செய்ய முடிவெடுத்து அதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த 2 மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை தற்போது ரத்து முடியாது என்றும், வரும் ஜனவரி 31ம் வரை இந்த வரி அமலில் இருக்கும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
0
0