விபத்தில் சைக்கிளை இழந்த ஏழை சிறுவன் : நேரில் சந்தித்து சைக்கிளை பரிசாக அளித்த காவலர்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2021, 12:28 pm
cycle Gift- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் சாலை விபத்தில் சைக்கிளை இழந்த, ஏழை சிறுவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் புதிய சைக்கிளை பரிசாக அளித்ததுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் சாலையில் உள்ள பால் கம்பெனி பகுதியைச் சேர்ந்த சிறுவன் சுபாஷ் சந்திரபோஸ். இவரது தந்தை ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் தாய் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுபாஷ் சந்திர போஸ் பெற்றோரின் சுமையை குறைப்பதற்காக ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பானிபூரி கடையில் தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன்பு, சைக்கிளில் வந்து கொண்டிருந்த, சிறுவன் சுபாஷ் மீது கார் மோதியதில், பலத்த காயம் அடைந்த சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஓட்டிச் சென்ற சைக்கிளும் முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில் விபத்து நடந்த மேற்கு போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காவல்துறை ஆய்வாளர் பிரதாப்சிங்,சிறுவன் வசித்த பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, சிறுவன் சுபாஷ் சந்திரபோஸ் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர் என்பதும், சிறுவயதிலேயே குடும்ப சுமையை குறைப்பதற்காக பானிபூரி கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிறுவனுக்கு புதிய சைக்களை பரிசளிக்க விரும்பிய போக்குவரத்து துறை ஆய்வாளர் பிரதாப் சிங், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுவன் சுபாஷ் சந்திரபோஸை சிறுவனை சைக்கிள் கடைக்கு அழைத்து சென்று புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி சிறுவனுக்கு வழங்கியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத சிறுவன் மற்றும் பெற்றோர் சைக்கிள் பரிசளித்த ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தனர். ஏழை குடும்ப சிறுவனின் கனவை நனவாக்கி சிறுவனுக்கு போக்குவரத்து ஆய்வாளர் சைக்கிள் பரிசளித்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Views: - 298

0

0