மீண்டும் மின்வெட்டா? தமிழகம் தாங்காது : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2021, 11:01 am
MNM Kamal - Updatenews360
Quick Share

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தின் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட். கோடைக்காலத்தில் இது சுமார் 17,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மி நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின் உற்பத்தி நிகழ்கிறது.

அனல்மின் நிலையங்கள் தடையின்றி இயங்க, நிலக்கரி அவசியம். அனல்மின் நிலையங்களில், 14 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் வெறும் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே உள்ளதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகலாம் எனும் அச்சம், தொழிற்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சூழ்ந்துள்ளது.

கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டால், தமிழகத்தின் விவசாயமும் தொழிற்துறையும் மருத்துவச் சேவைகளும் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாகின.

கோவை, திருப்பூர், கரூர், சிவகாசி போன்ற தொழில் நகரங்களின் பொருளியல் சிதைவுக்குள்ளாகின. பல தொழில் நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு தங்கள் தொழிலை மாற்றிக்கொண்டன. மீண்டும் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகிட அனுமதிக்கக் கூடாது.

பொருளாதார மந்தநிலையாலும், கொரோனோ பெருந்தொற்றினாலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வினாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பண்டிகைக் கால விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகி வருகிறார்கள். மருத்துவமனைகளுக்கும், விவசாயிகளுக்கும் தடையற்ற மின்சாரம் அத்தியாவசியம். இந்தச் சூழ்நிலையில், மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் ஏற்பட்டால் தமிழகம் நிச்சயம் தாங்காது.

தமிழக அரசு, தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து, அனல்மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

Views: - 282

0

0