+2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம் : கோவையில் 16,470 பேர் எழுதுகின்றனர்!!

16 April 2021, 11:50 am
Practical Exam -Updatenews360
Quick Share

கோவை : பிளஸ் 2 மாணவர்களுக்கான ,செய்முறை தேர்வுகள் இன்று துவங்கியுள்ளது.
கோவையில் 236 மையங்களில் 16,470 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும், 5ம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது. மே 31 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே, 3ல் நடக்கவிருந்த மொழிப் பாடத் தேர்வுகள், மே 31க்கு மாற்றப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நேற்று நடத்தப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், பள்ளி ஆய்வகங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி, மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க உள்ளனர். தலைமை ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, மாணவர்களின் செய்முறை தேர்வை, எந்த வித புகார்களுக்கும் இடமின்றி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று துவங்குகிறது. வரும் 23ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் முதல் கட்டத்தில் மாவட்டத்தில் 356 பள்ளிகளில் இருந்து 16 ஆயிரத்து 470 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை 236 மையங்களில் எழுதுகின்றனர். கொரோனா விதிமுறைகள் பின்பற்றி தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது,’’ என்றார்.

Views: - 22

0

0