கர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..!!

16 April 2021, 11:55 am
chain snatching - updatenews360
Quick Share

சென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க சென்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் உள்ள ரேணுகா நகரைச் சேர்ந்த கீதா என்னும் 8 மாத கர்ப்பிணி பெண், தங்களின் வீட்டு வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில் சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வந்த 3 மர்ம நபர்களில் ஒருவன் மட்டும் இறங்கி கீதாவை நோக்கிச் சென்றான். அங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென கீதா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சித்தான்.

இதனை சுதாரித்துக் கொண்ட கீதா, செயினை பறிக்க விடாமல் போராடினார். ஆனால், அந்த நபர் கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல், அவரை கீழே தள்ளிவிட்டு, சாலையில் தரதரவென இழுத்துச் சென்றான். அப்போது,கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால், செயின் பறிக்கும் முயற்சியை கைவிட்டு, அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி, அங்கிருந்து பறந்து சென்று விட்டான்.

இது தொடர்பாக, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கர்ப்பிணியின் தாலியை பறிக்க முயன்ற மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார் மற்றும அவருக்காக வாகனம் ஓட்டி வந்த கிரண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே கொலை வழக்குகள் இருக்கும் நிலையில், பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த கார்த்திக், விஜய், தினேஷ் உள்ளிட்டோரையும் போலீசார் வளைத்து பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 4 சவரன் நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Views: - 37

0

0