பிரசவ வலியால் துடிதுடித்த கர்ப்பிணி : ‘108‘ ஆம்புலன்சில் சுகப்பிரசவம்!!

24 September 2020, 2:12 pm
ambulance Delivery - updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : ‘108’ ஆம்புலன்சில் 9 மாத கர்ப்பிணி பெண்ணை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது பிரசவ வலி அதிகமாகி அவசர ஊர்திலேயே ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் ரேவதி (வயது 21). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ரேவதி மீண்டும் கர்ப்பமுற்றார். 9 மாத கர்ப்பிணியான ரேவதிக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஓட்டுனர் ஜெயராமன், மருத்துவ உதவியாளர் சுஜய் ஆகியோர் விரைந்து வந்து ரேவதியை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு செவிலிமேடு பாலாற்று வழியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் போது ரேவதிக்கு பிரசவ வலி அதிகமாகி வலியால் துடித்தார்.

இதையடுத்து ஓட்டுனர் ஜெயராமன் சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தியதை தொடர்ந்து மருத்துவ உதவியாளர் சுஜய், பெண்ணின் உறவினர் உதவியுடன் ரேவதிக்கு அவசர ஊர்திலேயே பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில், ரேவதிக்கு 2 கிலோ 600 கிராம் எடையுள்ள அழகான பெண் குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது.

தாயும் – சேயும் நலமாக உள்ளதை தொடர்ந்து இருவரையும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் சேர்க்கப்பட்டார். மருத்துவ உதவியாளர் சுஜய் மற்றும் ஓட்டுநர் ஜெயராமன் ஆகியோருக்கு ரேவதி பாலசுப்ரமணியத்தின் உறவினர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.