கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஏஎஸ்பி பல்வீர்சிங்கை சிக்க வைத்த வழக்கறிஞர் கைது.. மறுபக்கம் கிராமத்தில் இறங்கிய போலீசார்…!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 5:48 pm
Quick Share

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது சிபிசிஐடி போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்குகளில் தொடர்புடைய மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் ஆஜராகாமல் இருந்தனர். அவர்களிடம் நேரடியாக சிபிசிஐடி போலீசார் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிஉலகிற்கு கொண்டு வந்தவர் வழக்கறிஞர் மகாராஜன். இவர் நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பையும் நடத்தி வருகின்றார்.

அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய மகாராஜனை, போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்த நாளன்று மகாராஜனுக்கு அவரது ஆதரவாளர்கள் கிரேன் மூலம் பிரமாண்ட ரோஜாப்பூ மாலை அணிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதோடு, தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பகுதிக்கு செல்ல காவவ்லதுறையினர் விதித்த தடையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதாக குறும்பலாபேரியில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர்களதோடு ஆதரவாளர்கள் 4 பேரையும் கைது செய்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாராஜனை, நீதிபதியின் உத்தரவின் பேரில் 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, மேலப்பாவூர் கிராம மக்களிடையே அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர்.

Views: - 335

0

0