பேனா மை பாட்டிலை உடைத்து திடீரென தற்கொலைக்கு முயன்ற கைதி.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு.. விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
21 March 2023, 7:07 pm
Quick Share

நெல்லையில் பதட்டம் ஏற்படுத்திய சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கு கைதி நீதிமன்றத்தில் வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பதற்றம் நிலவியது.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுடலைமாட சுவாமி கோயிலை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தகராறில் கோவில் பூசாரி சிதம்பரம் (எ) துரை கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைது செய்தனர். தொடர்ந்து ஓரிரு மாதத்தில் பூசாரி சிதம்பரத்தின் உறவினர் மாயாண்டி என்பவரும் கொலை செய்யப்பட்டார்.

ஒரே சமூகத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது சீவலப்பேரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட இரண்டு சமுதாயத்திற்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினையை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில் பூசாரி சிதம்பரம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இரண்டு பேரை விசாரணைக்காக நெல்லை மாவட்ட கூடுதல் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, தங்கபாண்டி என்ற விசாரணை கைதி நீதிமன்றத்திலிருந்து பேனா மை பாட்டிலை உடைத்து, அதை கொண்டு தனது இடது கையில் கிழித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தங்கபாண்டியை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றத்துக்குள் வைத்து விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

பலமுறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தும் தனக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தங்கபாண்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் சமுதாய ரீதியாக தன்னை துன்புறுத்துவதாகவும், சிறையில் தன்னைக் காண வரும் உறவினர்களை போலீசார் மிரட்டுதாகவும் தங்கபாண்டி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த முறை இதே போல் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதும் தங்கபாண்டி நீதிமன்றத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் முட்டி இதேபோன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே தங்கப்பாண்டியன் மனநிலை தெரிந்தும் போலீசார் இன்று அவருக்கு உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்காமல் அலட்சியமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

Views: - 96

0

0