ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் : புகார் அளித்தும் பயனில்லை.. தவிக்கும் பெற்றோர்!!?

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2021, 2:41 pm
Private School Fees - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தாமல் கல்விக்கட்டணம் கட்ட சொல்லி தனியார் பள்ளி நிர்வாகம் நிர்பந்தம் செய்வதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சாண்டி வில்லியம். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தையை டாடாபாத் பகுதியிலுள்ள தனியார் பள்ளியான இந்தியன் பப்ளிக் பள்ளியில் எல்.கே.ஜி பிரிவிலும் மற்றொரு குழந்தையை ஒன்றாம் வகுப்பிலும் அத்தனியார் பள்ளியின் கோவில்பாளையம் கிளையில் சேர்ந்துள்ளார்.

இருவரையும் அப்பள்ளியில் சேர்ப்பதற்கு நன்கொடை கொடுத்ததுடன் பள்ளியில் பயில்வதற்கான பருவக்கட்டணத்தையும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தபட்ட நிலையில் போட்டோ கிராப்பி மற்றும் மதிய உணவிற்கு என ஒரு குழந்தைக்கு ரூ.50,000 கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அதனை கண்டதுடன் பள்ளி நிர்வாகத்திடம் பேசியுள்ளார். அப்போது அப்பள்ளியின் தாளாளர் அசோக் நாங்கள் ஐ.பி.என்னும் கல்வி முறையில் பள்ளி நடத்துவதால் எங்களை எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியாது என கூறியதுடன் ஆன்லைன்ல் கல்வி பயில தடை வித்துள்ளார்.

இதனைஅடுத்து சாண்டி மாவட்ட ஆட்சியர், பள்ளி கல்வி இயக்குனரகம், பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் முதல்வர் தனிபிரிவு என அனைவருக்கும் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த பலனும் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிக் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு உயர்நீதிமன்றம் மாணவிகளை ஆன்லைன் கல்வி கற்க உத்தரவிட்டுள்ளது. இதனையும் மதிக்காமல் பள்ளி நிர்வாகம் பணத்தையே குறிக்கோளாக கொண்டு பணம் கேட்டுள்ளது. இந்நிலையில் தனது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழை பள்ளிக்கு சென்று கேட்டுள்ளார்.

அதற்கு பள்ளி தாளாளர் அசோக், பணம் கட்டினால் தான் சான்றிதழ் தரமுடியும் எனவும் பணம் கட்டவில்லை என்றால் கோவை மாவட்டத்தில் எந்த பள்ளியிலும் குழந்தைகளை சேர்க்க முடியாமல் செய்து விடுவேன் எனவும் மிரட்டியதுடன் அதிக பணபலம் மற்றும் அதிகார தோரணையில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளதையடுத்து காவல்துறையினர் சார்பில் விசாரணைக்கு வர சொல்லி நோட்டீஸ் கொடுத்தும் இதுவரை விளக்கம் அளிக்க வில்லை என குற்றம்சாட்டினார்.

இதனைதொடர்ந்து பள்ளி மாற்று சான்றிதழை பெற்று, சாண்டி குழந்தைகள் இருவரையும் வேரொரு தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளார். ஆனால் பள்ளி மாற்று சான்றிதழ் பெற்ற பிறகும் அத்தனியார் பள்ளி நிர்வாகம் மேலும் பணம் கேட்டு நோட்டீஸ் விடுத்து மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளிக்கும் தனக்கும் தற்போது அந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் பள்ளி நிர்வாகம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அப்பள்ளி நிர்வாகமும் தாளாளர் அசோக் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்ற பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளையும், பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் அசோக்கை தொடர்பு கொண்ட போது மாணவிகளின் பள்ளி மாற்று சான்றிதழை வழங்கியுள்ளதாகவும் மிரட்டல் விடுப்பதற்கான அவசியம் இல்லை எனவும், நீதிமன்றம் தெரிவித்துள்ள 75% கட்டணத்தை பாதிக்கபட்டவர் கட்டவில்லை மாற்றாக ஒரு பருவத்திற்கான கட்டணத்தை மட்டுமே சாண்டி கட்டியுள்ளதாகவும் மீதமுள்ள கட்டணத்தை கட்ட சொல்லியே நோட்டீஸ் கொடுத்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தாமல் கட்டணத்தை கட்ட பெற்றோர்களை நிர்பந்திப்பதாக ஏராளமான புகார் வந்துள்ள நிலையில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 279

0

0