நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

18 October 2020, 1:39 pm
Minister Sengottayan - Updatenews360
Quick Share

ஈரோடு : நீட் தேர்வு முதல் முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி வழங்கும்,இரண்டாவது முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தார்சாலை, கறவை மாடுகள் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்ததாகவும் தற்போது நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த அரசுபள்ளி மாணவர் தான் முதலிடம் பிடித்துள்ளார் என்றும் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, அத்திகடவு-அவினாசி திட்டத்தின் கீழ் கொப்பளூர் ஏரி குளங்கள் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மருத்துவபடிப்பிற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து முதல்வர் சட்டம் இயற்றி உள்ளார்.

பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை. பள்ளிகள் திறக்க ஆலோசனை கூட்டம் நடைபெறவில்லை எனவும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி வழங்கும் , இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் நீட் தேர்வு எழுத வேண்டும் எனவும் தெரிவித்தார்