பயிர்களுக்கு மத்தியில் ‘பிரியா வாரியர்‘ புகைப்படம் : கண்திருஷ்டி கழிவதாக விவசாயி பெருமிதம்!!

17 November 2020, 9:53 am
Priya Warrior - Updatenews360
Quick Share

கோவை : பயிர்களுக்கு மத்தியில் வைக்கோல் பொம்மை வைப்பதற்கு பதிலாக நடிகை பிரியா வாரியரின் புகைப்படம் வைத்துள்ள விவசாயின் செயலை ஊர் மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

தோட்டத்தில், பயிர்களுக்கு மத்தியில், வைக்கோல் பொம்மை தயார் செய்து நட்டு வைத்த காலம், மலையேறி விட்டது. கோவை காரமடை அருகே, கண்டியூர் தக்காளி தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கலர்புல் திருஷ்டி பிளக்ஸ் பேனரில், கண்ணடிக்கிறார், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

புதிதாக வீடு, கட்டடங்கள் கட்டும்போதும், பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள விளைநிலங்களிலும், கண் திருஷ்டி பொம்மை வைப்பது வழக்கம். பொதுவாக ரெடிமேடாக செய்து வைத்துள்ள கண் திருஷ்டி பொம்மைகளையும், வைக்கோல் நுழைத்த பேன்ட், சட்டை அணிவித்த சோளக்காட்டு பொம்மைகளையும் வைப்பது வழக்கம்.

ஆனால் காரமடை அருகே கண்டியூரில், ஒரு விவசாயி சற்று வித்தியாசமாக, சினிமா நடிகைகளின் படங்களை கொண்ட பிளக்ஸ் பேனர்களை, பயிர்களுக்கு மத்தியில் வைத்துள்ளார். இதில், பிரபல மலையாள நடிகை, பிரியா பிரகாஷ் வாரியர், கண் அடிப்பது போன்ற படமும் உண்டு. இதை, அந்த வழியில் செல்லும் பலரும், ஆர்வத்துடன் பார்த்து, விசாரித்துச் செல்கின்றனர்.

விவசாயி சந்திரன் கூறியதாவது: விவசாயிகள், சோளக்காட்டு பொம்மைகளை, பயிர்களுக்கு நடுவில் கண் திருஷ்டிக்கு வைப்பது வழக்கம். அதை காலத்துக்கு ஏற்றபடி மாற்ற நினைத்தேன். சினிமா நடிகையரின் படங்களை பிளக்ஸ் பேனர்களாக தயார் செய்து, தோட்டத்தில் வைத்திருக்கிறேன்.

அவற்றில் ஒரு படம், நடிகை கண் அடிப்பது போன்று இருக்கிறது. பார்ப்பவர் அனைவரும், அந்த படத்தையும், அது வைத்திருப்பதன் நோக்கத்தையும் தான் விசாரிக்கின்றனர். எனவே, தக்காளி பயிருக்கு திருஷ்டி படாது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதைப்பார்க்கும் ஒரு சில விவசாயிகள், தாங்களும் சோளக்காட்டு பொம்மைக்கு பதிலாக, இது மாதிரியான படங்களை வைப்பதாக கூறிச்சென்றுள்ளனர்.இவ்வாறு விவசாயி கூறினார்.

Views: - 22

0

0