அடுத்தடுத்து நண்பர்களை கொலை செய்த சைக்கோ : ஒரே பாணியில் கொலை செய்தது அம்பலம்!!

28 November 2020, 7:41 pm
Psycho- Updatenews360
Quick Share

திருப்பூர் : ஒரே பாணியில் நண்பர்களை கொலை சைக்கோ குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் இசக்கி. இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இசக்கியின் நண்பர் மதுரையை சேர்ந்த சங்கர். இவரும், இசக்கியுடன் தங்கி இருந்தார்.

இவர்கள் 2 பேரும் பனியன் நிறுவன தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடக்கு போலீசார், வீட்டினுள் மூடிய நிலையில் இருந்த சிமெண்டு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர்.

அப்போது அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில், தொட்டிக்குள் பிணமாக கிடந்தவர் இசக்கி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இசக்கியுடன் தங்கி இருந்த சங்கரை போலீசார் தேடியபோது, வேறொரு கொலை வழக்கில், கோவை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது திருப்பூர் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருப்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து நீதிமன்றம் சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து சங்கரை ஒரு நாள் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2018-ல் அனுப்பர்பாளையம் பகுதியில் ஒருவரைக் கொலை செய்ததும், அதனை தொடர்ந்து வெங்கமேடு பகுதியில் கொலை செய்ததும்,நண்பர் இசக்கிமுத்து என மூன்று கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதில் மூன்று பேரையும் ஒரே பாணியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், கொலை வழக்கில் சங்கரை மீண்டும் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.