7 வயது சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்: துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

1 December 2020, 5:52 pm
trp 2 - updatenews360
Quick Share

திருப்பூர்: 7 வயது சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்ணை துரத்தி பிடித்து காவல் சோதனை சாவடியில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஏபிடி சாலையில் 7 வயது சிறுமி அப்பகுதி வழியாக போவோர், வருவோரிடம் பசி எடுப்பதாகவும் காசு வேண்டும் என்று கூறி பிச்சை எடுத்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த சிறுமியிடம் சாப்பாடு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துள்ளனர்.

ஆனால், அந்த சிறுமியோ சாப்பாடு வேண்டாம் பணம் தான் வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி யார் என அப்பகுதி பொதுமக்கள் விசாரித்துள்ளனர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த பெண்மணி திடீரென்று அங்கு வந்து அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த பெண்ணை துரத்திச் சென்றுள்ளனர். திருப்பூர் குமரன் கல்லூரி அருகே சென்ற அந்த பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த பெண் சரியான தகவல் எதுவும் தெரிவிக்காததால் கல்லூரி அருகே இருந்த ஆண்டிபாளையம் வாகன சோதனை சாவடியில் அந்த பெண்ணையும் சிறுமியையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் கேட்ட கேள்விக்கும் அந்த பெண் பதிலளிக்காமல் சந்தேகப்படும் வகையில் பேசியுள்ளார். இதனை அடுத்து திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அந்த பெண் யார் என்பது குறித்தும், சிறுமி கடத்தப்பட்டு வந்த சிறுமியா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 22

0

0