சாலை தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் ‘திடீர்‘ போராட்டம் : திருப்பூர் – தாராபுரம் சாலையில் பரபரப்பு!!

30 November 2020, 11:19 am
tirupur Mariyal - Updatenews360
Quick Share

திருப்பூர் : சாலையின் நடுவே வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியிலிருந்து அய்யம்பாளையம் , சபரி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு செல்ல இடையூறாக சாலையின் நடுவே காவல்துறை சார்பில் டிவைடர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் செட்டிபாளையத்திலிருந்து மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இடையூறு ஏற்படுவதோடு ஒரு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய சூழல் நிலவுவதாகவும் இதனால் நேர விரயம் ஏற்படுவதோடு வேலைக்கு செல்பவர்களுக்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் ஏற்கனவே அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் அதனை அகற்ற வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை அகற்றாத நிலையில் பொதுமக்கள் இன்று திடீரென திருப்பூர்-தாராபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு டிவைடர்களை அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாங்களாகவே சாலைத் தடுப்புகளை அகற்ற முயற்சித்ததால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் செட்டிபாளையம் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு செல்வதற்கான சாலையையும் நெடுஞ்சாலைத்துறை கற்கள் கொண்டு அடைக்கப்பட்டு இருப்பதால் சுடுகாட்டிற்கு செல்வதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் அதனை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Views: - 15

0

0