மின்சார ரயில்களில் பயணிக்க விமான நிலையம், எக்ஸ்பிரஸ் ரயில்களில் செல்லும் மக்களுக்கு அனுமதி…!!

13 November 2020, 8:49 am
Chennai metro train - updatenews360
Quick Share

சென்னை: விமானநிலையம் செல்வோரும், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் செல்லும் பொதுமக்களும் மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது முதல் மின்சார ரயில்கள் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இதனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து இந்த சிறப்பு மின்சார ரயில்களில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

நாள் ஒன்றுக்கு 150 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 204 மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மற்றும் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் ஆர்.தனஞ்செயலு, சென்னை ரெயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில்களில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் தக்க அனுமதி கடிதத்துடன் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் விமானம் மூலம் வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள பொதுமக்களும், சென்னையில் இருந்து பிற மாவட்டம், மாநிலம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளும், பயண தேதியில் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தலாம். மின்சார ரயில்களில் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மின்சார ரயில் சேவைகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 21

0

0