ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி : மீன் பிடிக்கும் போது நடந்த துயரம்!!

7 September 2020, 1:22 pm
Pondy 2 Dead - updatenews360
Quick Share

புதுச்சேரி : வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உறுவையாறு வெங்கட்டா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமு(வயது 18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் தேவகுரு(வயது 11). உறுவையாறு நத்தமேடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(வயது 9), பாகூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிகரபிரியன்(வயது 13) ஆகிய 4 பேரும் வில்லியனூர் ஆச்சாரியாபுரம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது ராமு ஆற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார். மீன் அகப்படாத நிலையில் தேவகுரு, சஞ்சய், ஹரிகரபிரியன் ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் திடீரென சேற்றில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கினர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கரையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமு ஆற்றில் குதித்து தேவகுரு, ஹரிகரபிரியன் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்றொரு சிறுவன் சஞ்சய் மாயமானார். இதையடுத்து ராமு அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஹரிகரபிரியனை வில்லியனர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் ஹரிகரபிரியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் இது தொடர்பாக மங்கலம் போலீஸார் மற்றும் வில்லியனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாயமான சஞ்சயை தேடிய நிலையில் அவர் பிணமாக மீட்டார்.

இதையடுத்து ஹரிகரபிரியன், சஞ்சய் ஆகிய இருவரின் உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் எடுக்கப்படும் மணல் கொள்ளையால் ஏற்பட்டுள்ள பள்ளம் தண்ணீரில் தெரியாததால் சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாகவும், எனவே மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 6

0

0