‘ஆத்த உன் சேல’: ஆட்சியர் முன் ஒலித்த கணீர் குரல்…அசர வைத்த அரசுப்பள்ளி மாணவர்…!!(வீடியோ)

Author: Aarthi Sivakumar
28 November 2021, 11:53 am
Quick Share

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன் காளிதாஸ், மாவட்ட ஆட்சியர் முன் பாரம்பரியமான நாட்டுப்புறப் பாடலை பாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்றுத் துறையில் படித்து வருபவர் காளிதாஸ். இவருக்கு சிறுவயது முதலே நாட்டுப்புற பாடல்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக, திருவிழா காலங்களில் கிராமப்புறங்களில் நடைபெறும் கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நாட்டுப்புறப் பாடல்களை பாடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கல்வி மாவட்டத்தின் சார்பில் காளிதாஸ் நாட்டுப்புறப் பாடல்கள் போட்டியில் கலந்துகொண்டு, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மாநிலத்திலேயே 2ம் இடம் பிடித்து அசத்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான கவிதா ராமு, பரதநாட்டியம், நாட்டுப்புற கிராமிய பாடல்கள் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால், இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மாணவன் படிக்கும் பள்ளிக்கு சென்று மாணவன் காளிதாஸ்சை அழைத்து நாட்டுப்புற பாடல்கள் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பின்னர் மாணவன் காளிதாஸ்சை தன் முன் நாட்டுப்புற பாடலை பாட சொல்லி கேட்டு மகிழ்ந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் முன் நாட்டுப்புறப் பாடல்களை பாடி அசத்திய காளிதாஸ்சை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாணவன் காளிதாஸ் கணீர் குரலில் நாட்டுப்புற பாடலை பாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 169

0

0