கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு… இளைஞருக்கு போட்ட ஸ்கெட்ச் ; மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 8:56 am
Quick Share

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒ. மேட்டுப்பட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்துள்ளது. அப்போது மர்ம நபர்கள் கல்லால் எரிந்ததில் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த ஒடுக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது யாசின் (21) என்ற இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அவரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரும்போது அவர்களுடன் ஒடுக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், வீரமணி ஆகிய இரண்டு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

விக்னேஸ்வரன் திருச்சியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சேமத்துப்பட்டி பிரிவு சாலை அருகே வரும்போது, அவர்களை வழிமறித்த ஒ.பள்ளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கடுமையாக தாக்கியதோடு, விக்னேஸ்வரனின் கழுத்திலும் இரும்பு கம்பியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த விக்னேஸ்வரனை அவ்வழியே வந்தவர்கள் கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கீரனூர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்ததோடு, போலீசாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கு குவிந்த சிலர் ஆத்திரத்தில் அரசு மருத்துவமனையின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின்பு அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், உயிரிழந்த விக்னேஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பின்னர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக ஒ.பள்ளத்துபட்டியை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் ராமலிங்கம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஞ்சிய ஐந்து நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர் இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் பதற்றம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Views: - 424

1

0