அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுகவின் தூண்டுதலின் பேரில் நடந்த சோதனை: அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

Author: Aarthi Sivakumar
14 August 2021, 3:19 pm
Quick Share

கோவை: அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கோவையில் ஆசிர்வாத் யாத்திரை 16ம் தேதி துவங்க உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் கோவை, திருப்பூர் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது.

மத்திய அரசு வழங்கிய நலத்திட்டங்கள் இந்த யாத்திரையின் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும். தமிழகத்திற்கு 7 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. முத்ரா திட்டத்தால் நாட்டிலேயே திருப்பூர் மாவட்ட மக்கள் அதிக பயன்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் முருகன் கிராமத்தில் பிறந்து உழைப்பால் முன்னேறியுள்ளார். இது தான் சமூக நீதி. மக்களும் அமைச்சரும் ஒன்றி இருக்க வேண்டும் என்று எங்கள் கட்சி நினைக்கிறது. அமைச்சரை கூட எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

43 மத்திய அமைச்சர்களும் 22 மாநிலங்களில் நடைபெறும் இந்த யாத்திரைகளில் கலந்து கொள்கிறார்கள். திமுக அரசு 100 நாட்கள் ஆட்சியை நிறைவு செய்கிறார்கள். அதிகாரிகள் நன்றாக பணியாற்றுகிறார்கள். கொரோனா இரண்டாவது அலையை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் மட்டும் 19 லட்சம் தடுப்பூசி தமிழகத்திற்கு அதிகமாக வந்துள்ளது. இதனை திமுக அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். ராணுவ தளவாட மையம் மூலம் 2 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இப்படி இணக்கமாக இருந்தால் முழு பயனும் கிடைக்கும். நாங்கள் எதிரி கட்சி அல்ல. எதிர் கட்சி தான்.

பெட்ரோல் விலை குறைப்பால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்பது மாற்றுக்கருத்து இல்லை. பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர கவுன்சில் ஒத்துழைப்பு வேண்டும். மாநிலத்தின் நிதி அமைச்சர் ஒத்துழைப்பாரா? நாடாளுமன்றத்தில் அமளி நடைபெற்றுள்ளது. தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை எம்.பி.,க்கள் பேசவில்லை. திட்டம் போட்டு பாராளுமன்றத்தில் அமளி செய்துள்ளனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், ஆகம விதிப்படி நடைபெற வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது. கோவைக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். மேல் விசாரணை நடைபெற்ற பின்னர் இதுகுறித்து பேசலாம். உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

காங்கிர்ஸ் கட்சியினர் தான் டிவிட்டரை கொண்டாடினர். பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டதால் தான் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கான கேள்விகளை எழுப்பாமல் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டு போல் எம்.பி.,க்கள் முன்பு நடனம் ஆடுகிறார்கள் திமுக எம்.பி.,க்கள். என அவர் கூறியுள்ளார்.

Views: - 379

0

0