வந்தாச்சு வானிலை அலர்ட்: நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு….மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!

Author: Rajesh
3 August 2021, 4:11 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். ஆகஸ்டு 5 மற்றும் 6ம் தேதிகளில் நீலகிரி, கோவை சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்

ஆகஸ்டு 7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஆக., 03 முதல் 7ம் தேதி வரை தென்மேற்கு வங்ககடல்,தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என புவியரசன் தெரிவித்து உள்ளார்.

Views: - 604

0

0