தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார் ராஜீவ் ரஞ்சன்….!!

1 February 2021, 11:42 am
rajiv ranjan - updatenews360
Quick Share

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்து வந்த க.சண்முகம் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை செயலாளராக, மத்திய அரசின் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள அமைச்சக செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ்ரஞ்சன் நியமிக்கப்பட்டார். இதற்காக ராஜீவ்ரஞ்சன், மத்திய அரசின் அயல் பணியில் இருந்து தமிழக அரசு பணிக்காக கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.

ராஜீவ்ரஞ்சனை புதிய தலைமை செயலாளராக நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இன்று காலை ராஜீவ்ரஞ்சன், சென்னை தலைமை செயலகத்தில் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ்ரஞ்சன் , 1985ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்த இவர், அறிவுசார் சொத்துரிமை பிரிவில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார். லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் மையத்தில், பப்ளிக் பாலிசியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றுள்ளார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மத்திய அரசின் அயல் பணியில் 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

2007ம் ஆண்டு முதல் இணைச் செயலாளர் அந்தஸ்திலும், 2009ம் ஆண்டு முதல் முதன்மை செயலாளர் அந்தஸ்திலும் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். மத்திய அரசின் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலில் சிறப்பு செயலாளராக பணியாற்றியவர். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர், சிறந்த நிர்வாக திறமை பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை மிக்கவர். வருகிற செப்டம்பர் மாதம் வரை இவரது பதவிக்காலம் உள்ளது. தமிழக அரசில் இதுவரை 46 தலைமை செயலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்கும் ராஜீவ்ரஞ்சன், தமிழக அரசின் 47வது தலைமை செயலாளர் ஆவார்.

Views: - 0

0

0