இதயமற்றவர்களால் வாழ வேண்டிய சிறுமி உயிருடன் எரித்த கொடூரம் : ராமதாஸ் வேதனை

11 May 2020, 5:23 pm
villupuram girl - updatenews360
Quick Share

சென்னை : விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக 10-ம் வகுப்பு சிறுமியை எரித்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முருகன், கலியபெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை எரித்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், சிறுமியை எரித்து கொலை செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, இதுபோன்ற கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

pmk ramadoss updatenews360

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.