மண்சரிவில் சிக்கி சிறுவன் உயிரிழக்க காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை : சீமான் வலியுறுத்தல்

25 June 2021, 1:43 pm
Seeman -Updatenews360
Quick Share

சென்னை : இராமநாதபுரம் அருகே மண்சரிவில் சிக்குண்டு சிறுவன் சுகனேசு உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மல்லல் (தெற்கு) கிராமத்தைச் சேர்ந்த சுகனேஷ் என்கிற சிறுவன் மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் கிணற்றின் பக்கவாட்டில் மண்சரிவு ஏற்பட்டு மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன்.

இத்துயரச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்தைக் கடந்துவிட்ட நிலையிலும், அச்சிறுவன் இறப்பதற்குக் காரணமான அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

அக்கிராமத்திலுள்ள திறந்தவெளி கிணறு சேதமடைந்துள்ளதெனப் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் புகார் கொடுத்த நிலையில் அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவாகத்தான் ஒரு சிறுவனின் உயிர் அநியாயமாகப் பறிபோயுள்ளது.

இதுபோன்று கடந்த காலங்களில் குழந்தைகள் கிணறுகளுக்குள் தவறிவிழுந்து இறந்துள்ள நிகழ்வுகளின்போது திறந்தவெளிக்கிணறுகளை அரசும், நீதிமன்றமும் பலமுறை மூட அறிவுறுத்தியும், அதனைச் செய்யாது மெத்தனப்போக்கோடு இருந்த அதிகாரிகளின் மோசமான செயலே அக்குழந்தையின் உயிரைப் போக்கியிருக்கிறது.

புகார்கொடுத்தும் நடவடிக்கை எடுத்து கடமையைச் செய்யத் தவறிய திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகிகளே அச்சிறுவனின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

ஆகவே, சிறுவன் சுகனேஷ் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறுவனைப் பறிகொடுத்துவிட்டுப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அக்குடும்பத்திற்கு 50 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 156

0

0