காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்- ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

Author:
24 June 2024, 10:46 am
Quick Share

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வெறிச்சோடிய துறைமுகம்!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்கான மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் நெடுந்தி அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மூன்று விசைப்படகையும், அதிலிருந்து 22 மீனவர்களையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றது. அதன் பின் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நேற்று மீன் பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று விசைப்படகு மற்றும் 22 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து பெரிய ரக விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளதால் தற்போது ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்பு தொழிலை நம்பி சுமார் 5,000 மேற்பட்டோர் வேலையிலிருந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 111

0

0