பழக்கடை பெண்ணிடம் பாசத்தை காட்டும் அரிய வகை அணில் : 122 நாட்களுக்கு பின் மீண்டும் சாப்பிட வந்த விநோதம்!!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2021, 3:53 pm
நீலகிரி : கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து 122 நாட்களுக்கு பின் குன்னூரி பழக்கடையை திறந்ததும் குறிப்பிட்ட பெண்ணின் பழக்கடைக்கு ஞாபகார்த்தமாக வந்த மலபார் அணில் பழங்கள் வாங்கி சாப்பிட்டு சென்ற காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் அறிய வகை மலபார் அணிகள் உள்ளன. மரங்களில் சுற்றித்திரியும் இவ்வகையான மலபார் அணில்கள் பழங்கள் மட்டும் உண்டு வாழ்கின்றன.
இவை மிகவும் மென்மையான குணாதிசயங்களை கொண்டதால் மனிதர்களை கண்டாலே காடுகளுக்குள் ஓடி ஓழிந்துக்கொள்ளும். மனிதர்களை அண்டாத இவை குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் பழக்கடை வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பழங்களை வாங்கி சாப்பிட்டு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பூங்கா மூடப்பட்டது. பின்னர் கொரோனா குறைந்ததால் 122 நாட்களுக்கு பின் சில கட்டுப்பாடுகளுடன் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. சாலையோர பழக்கடைகளும் திறக்கப்பட்டது.
ஊரடங்கு முடிந்ததும் சுற்றுலா பயணிகள் வருவது போல சற்றும் மாற்றமில்லாமல் மலபார் அணில் அந்த பெண்மணி வைத்திருக்கும் பழக்கடை வந்தது. அதற்கு மிகவும் விருப்பமான ‘பட்டர் புரூட்’ பழத்தை மட்டும் பெண்மணியிடம் வாங்கி அங்கேயே அமர்ந்து மனிதர்களை போல் பழங்களின் தோலை வாயால் அகற்றி பழங்களை மட்டும் சாப்பிட்டது.
இந்த காட்சியை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் பதிவு செய்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு மலபார் அணில் மீண்டும் மரத்தின் மேல் தாவி ஓடி விட்டது. இந்த காட்சிகள் சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தியது.
0
0