ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்: இருநாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!!
Author: Aarthi Sivakumar18 October 2021, 3:41 pm
கோவை: ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் 2 நாள் தீவிர தேடுதலுக்கு பின் இன்று மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அருகே ஒரத்திமலையில் இருந்து உருவாகும் பள்ள ஓடையானது மத்திபாளையம் வழியாக சென்னனுார் குட்டைக்கு செல்கிறது. கன மழை காரணமாக இப்பள்ளத்தில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மத்திபாளையம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த விஜயா (55) மற்றும் 3 பேர் நேற்று முன் தினம் தோட்ட வேலைக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போது, ஓடையில் இறங்கி சாலைக்கு வரும் போது, மழை வெள்ளத்தில் விஜயா அடித்து செல்லப்பட்டார்.
உடனடியாக, அருகில் இருந்தவர்கள் தொண்டாமுத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு 7:30 மணி வரை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி கைவிடப்பட்டது. மீண்டும் நேற்று காலை முதல் பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்று வந்தது.
ஓடை மற்றும் குட்டையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தேடியும் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து இன்று காலை பொக்லைன் இயந்திரத்தை கொண்டு உடலை தேடும் பணி நடைபெற்றது. இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு விஜயாவின் உடல் சென்னனூர் குட்டையில் இருந்து இன்று மீட்கப்பட்டது
ஓடை வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0