ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி கட்டிப்போட்டு ரூ.12 லட்சம் துணிகர கொள்ளை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பியோட்டம்… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 4:21 pm
Retired Bank Staff Theft -Updatenews360
Quick Share

திருச்சி அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி வீட்டில் வைத்திருந்த 12 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ள தா.பேட்டையை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கனரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று காலை தா.பேட்டை அருகே உள்ள வளையெடுப்பு கிராமத்திற்கு முத்துசாமி அவரது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 5 பேர் முத்துசாமியின் கைகள் மற்றும் கண்களை கட்டி கடத்தி சென்றனர். நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் ஓர் அறையில் அடைத்து வைத்து வீட்டின் பீரோ சாவி எங்கு உள்ளது என கேட்டு சித்திரவதை செய்துள்ளனர்.

பின்னர் முத்துசாமியிடம் இருந்த வீட்டின் சாவியை பறித்துக் கொண்டு வந்த இரு கொள்ளையர்கள் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டை திறந்து பீரோவில் இருந்த ரூபாய் 12 லட்சம் ரூபாய், 6 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை துறையூர் அருகே உள்ள சிக்கதம்பூர் பகுதியில் முத்துசாமியை விடுவித்துவிட்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து தா.பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முத்துசாமி சம்பவம் குறித்து தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் முத்துசாமியின் வீட்டிற்கு திருச்சியில் இருந்து மோப்ப நாய் லாலி மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர்.

பட்டப் பகலில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி சென்று கட்டிப்போட்டு அவரது வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 262

0

0