சண்முக சுப்பையா நியமன விவகாரம் : முகாந்திரம் இருந்தால் மறுபரிசீலனை.. அமைச்சர் கடம்பூர் ராஜு

30 October 2020, 4:47 pm
Minister Kadamboor - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் சண்முக சுப்பையா நியமனம் தொடர்பாக எழுந்துள்ள புகாரில் உண்மை இருந்தால் நியமனம் தொடர்பாக மறுபரிசீலனை செய்வது நல்லது என்பது எங்கள் கருத்து என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 113 ஜெயந்தி விழாவை முன்னிட்டு பயணியர் விடுதி முன்பு உள்ள தேவர் சிலை, இளம்புவனம் மற்றும் வடக்கு இலந்தைக்குளத்தில் உள்ள தேவர் சிலைகளுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் தேவர் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ ராஜூ பாலபிஷேகம் செய்தார்.இதில் எம்.எல்.ஏ.சின்னப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுகவில் இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்.ஜீ.ஆரை நீக்கிய பின்னர் அவர் அதிமுகவை தொடங்கினார். இதன் பின்னர் நடைபெற்ற 10 சட்டமன்ற தேர்தல்களில் 7ல் அதிமுகவும், 3 திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் வேறுன்றவில்லை என்றும், எம்.ஜி.ஆருக்கு பின்னர் பல திரைப்பட நடிகர்கள் சிவாஜி முதல் கமல்ஹாசன் வரை கட்சி ஆரம்பித்து இருந்தாலும் இதுவரை நீடித்து இருக்கும் கட்சிகளாக அதிமுக, திமுக தான் உள்ளது,மற்ற கட்சிகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆயுட்கால முதல்வர்களாக இருந்தனர்.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் வந்தாலும் , எத்தனை போட்டிகள் வந்தாலும் தமிழகத்தில் வெற்றி பெறப்போவது அதிமுக என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் சண்முக சுப்பையா நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேட்டதற்கு, நிர்வாக குழு நியமனம் என்பது மத்திய அரசு கட்டுப்பாட்டில் வருகிறது என்றும், புகார் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்.

புகார் பற்றி தெரிந்த பின்னர் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த புகாரில் உண்மை இருந்தால் நியமனம் தொடர்பாக மறுபரிசீலனை செய்வது நல்லது என்பது எங்கள் கருத்து என்றார்.