சொகுசு காரில் வந்து நகைகளைத் திருடிய ‘பணக்காரத் திருடன்‘ : 12 மணி நேரத்தில் போலீசார் வலையில் சிக்கினான்!!

6 November 2020, 1:22 pm
Theft - Updatenews360
Quick Share

சென்னை : எம்.கே.பி நகரில் 50 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது. சொகுசு காரில் வந்து திருடிச் சென்றது அம்பலம்

சென்னை எம்.கே.பி நகர் மத்திய நிழற்சாலை அப்துல்கலாம் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜோசப் செல்வராஜ் (வயது 57). வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 26 ம் தேதி தன்னுடைய மகன் அலெக்சாண்டர் என்பவருக்கு திருமணம் நடந்து மகன், மருமகள், மற்றும் ஜோசப் செல்வராஜின் மனைவி  அனைவரும் பெங்களூர் சென்று விட்டனர். இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார். மாலையில் எதிர் வீட்டில் வசித்து வரும் லலிதா என்பவர் ஜோசப் செல்வராஜூக்கு போன் செய்து  உங்களது வீட்டில் சத்தம் வருவதாக கூறினார். உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த 50 சவரன் தங்கம் மற்றும் நான்கு வைர கம்மல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த ஜோசப் செல்வராஜ், எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற எம்.கே.பி நகர் போலீசார் அந்தப் பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது . போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒரு கார் அந்தப் பகுதி முழுவதும் சுற்றி வந்தது கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து அந்த காரின் பதிவு எண்ணை வைத்து நேற்று முன்தினம் போலீசார் ரெட்டில்ஸ் , காரனோடை அருகிலுள்ள ஆத்தூர் என்ற ஊரில் சென்று அங்கு சொகுசு பங்களா ஒன்றில் இருந்த ஜான்சன் வயது 55 என்ற நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தான் ரியல் எஸ்டேட் செய்து வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு போலீஸார் தங்களது ஸ்டைலில் விசாரித்ததில் திருடியதை ஒப்புக் கொண்டார் இதனையடுத்து அவர் வீட்டில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் வைரக் கம்மல் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஜான்சன்  ஈடுபட்டு இருந்ததும் அதன் பிறகு ஊருக்கு ஒதுக்குப்புறமாக சொகுசு பங்களா ஒன்றை வாங்கி அதில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

தற்போது கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் கடந்த எட்டு மாதங்களாக எந்தவித ரியல் எஸ்டேட் தொழிலும் சரியாக போகாததால் மீண்டும் பழையபடி காரை எடுத்துக் கொண்டு வியாசர்பாடி பகுதியில் வந்ததாகவும் குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் இரண்டாவது தளத்திற்கு சென்று மற்ற வீடுகளின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டு குறிப்பிட்ட பூட்டியிருந்த அந்த வீட்டை மட்டும் உடைத்து திருடி சென்றதாகவும் குற்றவாளி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். திருட்டு சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை எம்கேபி நகர் போலீசார் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 19

0

0