தலித்துகளுக்கு எதிரான அணியில் இருப்பதாக அதிகரிக்கும் விமர்சனம்: 2021 தேர்தலில் ஆதிதிராவிடர் கட்சியாகவே களம் இறங்கும் விசிக

29 September 2020, 8:52 pm
Quick Share

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் வெறும் தலித்துகளுக்கான கட்சியல்ல என்றும் இனி அது தமிழ் தேசியக் கட்சியென்றும் கட்சியின் பெயரை முழுவதும் மாற்றியமைக்கும்போது அதன் தலைவர் தொல். திருமாவளவன் சொல்லியிருந்தார். ஆனால், 2021 தேர்தலில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தலித் அரசியலைக் கையிலெடுக்கும் சூழலில் மீண்டும் தலித் கட்சியாகவே களம் இறங்குகிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள்.

அண்மையில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் தவிர மற்ற அனைத்து தாழ்த்தப்பட்ட சாதியினரையும் ஆதிதிராவிடர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலித் உரிமைகளுக்காகப் பேசிவந்தாலும் தலித்துகளில் ஒருபிரிவினரான ஆதிதிராவிடர்களை மையமாக வைத்தே அரசியல் செய்து வந்தது, கட்சியின் பெரும்பாலான தொண்டர்களும் நிர்வாகிகளும் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆதிதிராவிடர் அதிகம் இருக்கும் வட மாவட்டங்களிலேயே அவர்களுக்கு ஓரளவு செல்வாக்கும் வாக்கு வங்கியும் இருக்கின்றது.

தெற்கே தேவேந்திரகுல வேளாளர் இருக்கும் பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு சொல்லிக்கொள்ளும்படி செல்வாக்கில்லை. கொங்குப் பகுதியிலும் அருந்ததியர் இன மக்களிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு இல்லை. மிகவும் குறுகிய ஆதரவு தளமே இருப்பதால் அக்கட்சியால் தனியாகத் தேர்தலை சந்தித்துத் தொகுதிகளைப் பெற முடியாத நிலை இருக்கிறது. கூட்டணியில் சேரும்போதும் மிகக்குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படுகின்றது. இந்நிலையில், டிபிஐ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டுவந்த கட்சியின் பெயர் ஆங்கிலத்திலும் விசிகே என்று திருமாவளவன் அறிவித்தார்.

விசிக ஒரு தலித் கட்சியல்ல என்றும் இது அனைத்து தமிழர்களையும் உள்ளடக்கிய தமிழர் தேசியக் கட்சியென்றும் அவர் அறிவித்தார். இஸ்லாமியர்களையும் பெருமளவு கட்சியில் சேர்த்து உத்தரபிரதேசத்தில் பகுஜண் சமாஜ் கட்சியைப் போல விசிகவின் ஆதரவு தளத்தை விரிவுபடுத்த திருமாவளவன் திட்டமிட்டார். ஆனால், அவர் நினைத்ததுபோல் நடைபெறவில்லை. திருமாவளவனைத் தலைவராக ஏற்க அனைத்து சமூக மக்களும் முன்வரவில்லை. அவர் ஒரு தலித் தலைவராகவே பார்க்கப்படுகிறார். தற்போது, தமிழ்நாட்டில் தலித் அரசியலில் பாஜகவும் இறங்கியுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து எல். முருகனை பாஜக மாநிலத் தலைவராக ஆக்கியுள்ளது அக்கட்சியின் தேசியத் தலைமை. திருமாவளவன் கூட்டணியில் இருக்கும் திமுக மீது தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டை பாஜக மீண்டும் மீண்டும் எழுப்பிவருகிறது. தலித்துகளை மதிக்காத கூட்டணியில் திருமாவளவன் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற எட்டு மாதங்களே இருக்கும் சூழலில் தலித்துகளின் முக்கிய பிரிவான ஆதிதிராவிட மக்களைத் திரட்டவும் அப்பிரிவினரின் எண்ணிக்கையை அதிகரித்து பெரிய வாக்கு வங்கியாக்கவும் விசிக முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியினர் தவிர அனைவரையும் ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்குமாறு டி. இரவிகுமார் கோரியுள்ளார். ஆனால், பெரும்பாலான ஆதிதிராவிட மக்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவை ஆதரித்துவருகின்றனர்.. அவர்களில் திமுகவை ஆதரிப்போரும் உள்ளனர். அதிமுக, திமுக ஆகிய முக்கிய கட்சிகளின் இருந்து ஆதிதிராவிட மக்களை வெளியே கொண்டுவந்து விடுதலைச் சிறுத்தைகளில் ஆதரவு தளத்தை விரிவுபடுத்துவது மிகவும் கடினமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. திமுகவின் கூட்டணியில் இருப்பதைவிட அதிமுகவுடன் அணி சேர்ந்தால் ஆதிதிராவிட மக்களின் ஆதரவை விசிக பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

Views: - 12

0

0