சாலையோர ‘பார்க்கிங்’ கட்டண திட்டம் தற்காலிக ரத்தா? கோவை மாநகராட்சியின் திட்டம் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2022, 7:17 pm
Cbe Parking Fee Cancel - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட இருந்த சாலையோர பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள 30 சாலைகளில் முதற்கட்டமாக சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணங்களை விதித்து மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதன்படி இருசக்கர வாகனம் ஒன்றிற்கு, ஒரு மணி நேரத்திற்கு 1 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 30 முதல் 40 ரூபாயும் வசூலிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

Coimbatore City Municipal Corporation

இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே இத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையோரப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கும் பொருட்டு 30 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்கின்ற தனியார் நிறுவனங்கள் மூலம் 5 வருட காலங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தும் இதே போல் மாநகராட்சிப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் வாகன நிறுத்தும் இடங்களில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஒருமணி நேரத்திற்கும் மற்றும் மாத வாடகை கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது.

Coimbatore City Municipal Corporation

இது தொடர்பாக தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கேட்பு அறிக்கை பெறப்படவில்லை. எனவே மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கென நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை ஒப்பந்ததாரர் மூலம் வசூலிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக அரசு இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக கபடநாடகம் போடுவதாகவும் தேர்தல் முடிந்த கையோடு இந்த திட்டத்தை அமல்படுத்தும் வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Views: - 240

0

0