திருச்சியில் அடுத்தடுத்து கடைகளில் கொள்ளை : மூன்றாவது கண் துணையுடன் குற்றவாளிகளை தேடும் போலீசார்

Author: kavin kumar
7 January 2022, 4:16 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூபாய் 3 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மேல புலிவார்டுரோடு இப்ராஹிம் பார்க் எதிரே உள்ள எல்.கே.எஸ் வணிக வளாகத்தின் தரை தளத்தின் கீழே ஸ்ரீ ஜெய குரு ஏஜென்சிஸ் என்ற மோட்டார் பம்புசெட், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இதில் கடையின் உரிமையாளர் இன்று கடையை திறக்க வந்த போது ஷட்டரில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடையில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூபாய் 2 லட்சத்து 31ஆயிரமும் மேலும், அருகில் இருந்த மற்றொரு கடையில் ரூபாய் ஒரு லட்சம் கொள்ளையடித்துள்ளனர்.

இதே போல் நடு குஜிலி தெருவில் ஹவர்சிங் என்பவரது மகன் வீரேந்திரசிங் ஜெய் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இன்று தனது கடையைத் திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்ட போது அதில் 3 பேர் வந்துள்ளது பதிவாகியுள்ளது. மேலும், மூன்று பேரும் கதவை கையால் லேசாக நெம்பி ஒருவர் மட்டும் உள்ளே சென்று பணம் பொருளை தேடி உள்ளார். ஒன்றும் கிடைக்கவில்லை என்றதும் திரும்பி சென்றுவிட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி பதிவினை வைத்து காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் இரண்டு கடைகளில் ரூபாய் 3.31லட்சம் கொள்ளை ஈடுபட்ட நபர்கள் இதே நபர்கள் தானா அல்லது வேறு நபர்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஒரே இரவில் அருகருகே மூன்று இடத்தில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 274

0

0