தென் மாவட்டங்களை கலக்கிய கொள்ளை கும்பல் கைது : 16 வாகனங்கள் பறிமுதல்….

Author: kavin kumar
25 January 2022, 4:07 pm
Quick Share

விருதுநகர் : தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, நரிக்குடி , திருச்சுழி ஆகிய கிராமப் பகுதிகளில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாகவும், அதனைக் கண்டுபிடித்து தர வேண்டுமெனவும் காவல்நிலையத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகரன் உத்தரவின்படி, அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ், திருச்சுழி டிஎஸ்பி மதியழகன் ஆகியோர் ஆலோசனைப்படி காரியாபட்டி இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நரிக்குடி மெயின்ரோட்டில் பாப்பணம் விலக்கு அருகே வாகன சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் சரண் என்பவரை நிறுத்தி வைத்து விசாரித்தனர். அப்போது காரியாபட்டி அச்சம்படியை சேர்ந்த சரண் (என்ற) செல்வம் (27), அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் (என்ற) சகாதேவன் (30) ஆகிய இருவரும் இருசக்கர வாகனங்கள் திருடி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களை விசாரித்தபோது அதிக வாகனங்கள் திருடியதும், அவற்றை தனது உடன்பிறந்த சகோதரர்களான அச்சம்பட்டியை சேர்ந்த கருப்புசாமி(37), வீரமணி(34)ஆகிய இருவரிடமும் கொடுத்து அந்த வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் 4 பேரையும் காரியாபட்டி காவல் நிலையம் அழைத்து வந்து வி.ஏ.ஓ காசிமாயன் மற்றும் கிராம உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நான்கு பேரையும் விசாரித்தபோது விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தையும், நான்கு சக்கர வாகனங்களை திருடி அதை பிரித்து விற்று வந்ததாகவும், கருப்பசாமி, வீரமணி, குணசேகரன் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி என்பதையும் வாக்குமூலத்தின் மூலம் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வாகனத்தை திருடியவர்கள் மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கி உடைத்து உதிரி பாகங்களை விற்று வந்த இருவர் உட்பட 4 பேரையும் கைது செய்து, திருடப்பட்ட 13 இருசக்கர வாகனங்கள், இரண்டு ஆட்டோக்கள் மற்றும் ஒரு டாடா ஏசி வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Views: - 1866

0

0