இப்படியும் ஏமாத்துறாங்க உஷார்: அதிக வட்டி தருவதாக கூறி மோசடி…ரூ.5 கோடியை சுருட்டிச்சென்ற தனியார் கூட்டுறவு வங்கி…தர்மபுரியில் ஷாக்..!!
Author: Rajesh19 மே 2022, 10:50 காலை
தருமபுரி: பொம்மிடியில் தினசரி சேமிப்பு வங்கி திட்டம் நடத்தி 5 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் கூட்டுறவு வங்கி மீது பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் எனும் பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வந்தது. இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் தினசரி சேமிப்பு திட்டம், வாராந்திர சேமிப்பு திட்டம், மாதாந்திர சேமிப்பு திட்டம், நிரந்தர இட்டு வைப்பு திட்டம் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு 90 நாட்களுக்கு பணம் கட்டிய பிறகு கடன் வழங்கப்பட்டது. நாள்தோறும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்டி வந்துள்ளனர். 360 நாட்கள் கட்டிய பிறகு தொகைக்கேற்ப 10% முதல் 20% வரை கூடுதல் தொகை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. பொம்மிடியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வாடிக்கையாளருக்கு பணம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இதனை நம்பி பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், வேப்பிலைப்பட்டி, பையர்நத்தம் உள்ளிட்ட, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வணிகர்கள் தினந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதில் 500 க்கும் மேற்பட்டோர் 5 கோடிக்கு மேல் டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பொம்மிடியில் கடந்த பத்து நாட்களாக தனியார் கூட்டுறவு கடன் சங்கம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர் , பொம்மிடி காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் இன்று சங்க அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் சங்கத்தின் தலைமையகம் சேலம் மூன்று ரோடு பகுதியிலும்,இதே பெயரில் தமிழகம் முழுவதும் பல கிளைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான தனியார் கூட்டுறவு கடன் சங்கத்தினரிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1
0