4 நாட்களாக குளத்தில் தங்கி தண்ணி காட்டி வந்த ரவுடி : கச்சிதமாக வலைவிரித்து பிடித்த போலீசார்…!!

Author: Babu Lakshmanan
16 March 2022, 10:27 am
Quick Share

தென்காசியில் தண்ணீரில் பதுங்கியிருந்து மக்களை மிரட்டி வந்த ரவுடியை போலீசார் டிரான் மூலம் கண்காணித்து கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சநாயக்கன் பொத்தை என்ற பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இந்த குளத்தில் அடர்ந்த நிலையில் செடிகள் வளர்ந்து காணப்படும். இந்த நிலையில், தென்காசி நகரைச் சேர்ந்த சாஹுல் ஹமீது என்ற ரவுடியை போலீசார் தேடி வந்தனர். எந்தப் பகுதிக்கு சென்றாலும், போலீசாருக்கு தெரிந்து விடுகிறது என்ற அச்சத்துடன் இருந்த ஹமீது, செடிகள் நிறைந்து காணப்படும் குளத்தில் பதுங்கியிருக்க திட்டமிட்டார்.

அதன்படி, மான் கொம்பு வைந்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சாஹுல் ஹமீது அந்த குளத்தில் உள்ள ஒரு பகுதியில் தலைமறைவானார். அப்போது, கால்நடை மேய்க்க வரும் நபர்களை மிரட்டுவது, பெண்களை மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தார். எனவே, அவரை பிடித்துக் கொடுக்கச் செல்பவர்களை அரிவாளை காட்டியும் மிரட்டியுள்ளார். குளத்தில் முளைத்திருக்கும் அடர்ந்த செடிகளுக்குள் தன்னை மறைத்துக்கொண்டு இருந்ததால் போலீசாருக்கும் ரவுடி சாஹுல் ஹமீதை பிடிப்பது பெரும் சிக்கலாக இருந்தது.

இதனிடையே, போலீசார் தங்களின் மாஸ்டர் மைன்டை பயன்படுத்தி, டிரோன் மூலம் தண்ணீரில் பதுங்கி தண்ணி காட்டி வந்த ரவுடி ஹமீதை கண்காணிக்கத் தொடங்கினர். அதேவேளையில், காவல் சீருடை இல்லாமல் குளத்தில் இறங்கி டிரோனின் உதவியுடன் ரவுடியை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஒருவழியாக ரவுடி சாஹுல் ஹமீதை போலீசார் கைது செய்தனர். தண்ணி பாம்பு போல செடி, கொடிகளுக்கு நுழைந்து, தலையை மட்டும் வெளிக்காட்டி, போலீசாருக்கே தண்ணி காட்டிய ரவுடி கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Views: - 292

0

0