சென்னையை கலக்கிய பிரபல ரவுடி தூத்துக்குடியில் கைது : துப்பாக்கி முனையில் சிக்கினான்!!

5 November 2020, 5:15 pm
Chennai Rowdy Arrest - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சென்னை பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவாரூர் கோகுல்நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் தனசேகரன் என்கிற எண்ணுர் தனசேகரன். இவர் மீது சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னையில் பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரன் சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகமால் இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரனை சென்னை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள அங்கு பிளாசா என்ற தனியார் விடுதியில் தனசேகரன் தங்கியிருப்பதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடந்து மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பெயரில் கோவில்பட்டி டி.எஸ்.பி.கலைக்கதிரவன் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் போலீசார் தனியார் விடுதிக்கு சென்று துப்பாக்கி முனையில் சோதனை மேற்க்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் தனசேகரன் மற்றும் அவருடன் இருவர் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணைக்காக மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் அறையில் இருந்த 2 அரிவாள், ஒரு கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தனசேகருடன் உடன் இருந்தது சைதாப்பேட்டையை சேர்ந்த மதன்குமார், திருவெரும்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதில் மதன்குமார் மீதும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். சொந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கோவில்பட்டி தனியார் விடுதியில் தங்கி இருந்ததாகவும், வழக்கறிஞர் அருள்ராஜ் நண்பர் ஒருவர் கோவில்பட்டியில் இருப்பதாகவும், அவர் மூலமாக சிவகாசியில் பட்டாசு வாங்கி கொண்டு ஊருக்கு திரும்ப திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் தனசேகரன் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்து இருந்தனர். வழக்கறிஞர் அருள்ராஜ் மட்டும் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை போலீசார் கோவில்பட்டிக்கு வந்தனர்.

அவர்களிடம் தனசேகரன், மதன்குமார் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். சென்னையில் பிரபல ரவுடி கோவில்பட்டியில் தனியார் விடுதியில் தங்கியிருந்ததும், போலீசார் அவரை பரபரப்பாக கைது செய்த சம்பவம் நள்ளிரவில் கோவில்பட்டி நகரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

Views: - 74

0

0