காதலர் சிக்காவுடன் சிக்கிய ரவுடி பேபி சூர்யாவுக்கு சிறை : யூடியூப் நேரலையில் ஆபாச பதிவால் நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2022, 9:58 pm
Surya Jail - Updatenews360
Quick Share

கோவை : யூடியூபில் வீடியோ பதிவிட்டதால், தனது செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக பெண் அளித்த புகாரின் பேரில், யூடியூபர் சூர்யா மற்றும் அவரது காதலர் சிக்கா ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த யூடியூபர் திலகா அவரது கணவர் முத்து ஆகியோர் யூடியூபில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்களது 10 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேசிய வீடியோவை அவர்களது யூடியூபில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவிற்கு கமெண்ட் பதிவிட்ட ரவுடி பேபி என்றழைக்கப்படும் சூர்யா, அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக தம்பதிகளும், சூர்யாவின் யூடியூப் லைவ்வில் பதிலளிக்க, அங்கும் சூர்யா, மோசமான வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தம்பதிகளின் செல்போன் எண்களை சூர்யா தனது எண் என தனது யூடியூப் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலரும் தம்பதிகளை அழைத்து, சூர்யா என நினைத்து மோசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் இது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, அவரது காதலர் சிக்கா ஆகிய இருவரையும் இன்று காலை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்தனர்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் கொரோனா பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் ஆன்லைன் முறையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படனர். தொடர்ந்து, ரவுடி பேபி சூர்யா கோவை மத்திய சிறையிலும், அவரது காதலன் சிக்கா பொள்ளாச்சி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

கடந்தாண்டும், ஆன்லைனில் ஆபாசமாக பேசுவதாக சூர்யா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 440

0

0