டாஸ்மாக் பாரில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஆம்புலன்சில் சடலத்துடன் உறவினர்கள் மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 8:41 pm
Triupur Mariyal - Updatenews360
Quick Share

திருப்பூர் : டாஸ்மாக் பாரில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி, இறந்தவரின் உடல் வந்த ஆம்புலன்சுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூர்-வாஷிங்டன் நகரில் வசித்து வருபவர் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாபுராஜா (வயது 37). இவர் மீது பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன.

இந்நிலையில் பெருமாநல்லூரில் அரசு தடையை மீறி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பாருக்கு சென்ற பாபுராஜா குடிபோதையில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் பாபுராஜாவிற்கும், பாரில் இருந்தவர்களுக்கும் தகராறு முற்றி அடிதடி ஏற்பட்டுள்ளது.

இதில் பாரில் இருந்தவர்கள் தாக்கியதில் பாபுராஜா காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வந்த அவரது நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு சென்ற பாபுராஜா உயிரிழந்ததாக தெரிகிறது.

இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலம் எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு பெருமாநல்லூர் காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாபுராஜா உடல் ஆம்புலன்சி்ல் எடுத்து வரப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய கோரி, இறந்தவரின் உடல் வந்த ஆம்புலன்சுடன், உறவினர்கள் திருப்பூர் – பெருமாநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டனர். மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர் கண்ணப்பன், ஊழியர்கள் உதய சந்துரு, முனியசாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

Views: - 451

0

0