பணியின் போது உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபு குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

30 August 2020, 5:41 pm
Quick Share

பணியின் போது உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபு குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சென்னிமலை சாலையிலுள்ள திட்டுப்பாறையில் கொரோனா பரவல் தடுப்பிற்காக காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் ஆயுதப்படை காவலர் பிரபு உள்ளிட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடியில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் வந்துள்ளது.

இதுகுறித்த தகவல் திட்டுப்பாறை சோதனை சாவடிக்கு தெரிவிக்கப்பபட்டது. இதையடுத்து டிவைடர்களால் சாலையை மறித்து லாரியை மடக்கி பிடிக்க திட்டுப்பாறை சோதனை சாவடி காவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த லாரி, டிவைடர்களை இடித்து தள்ளிவிட்டு தப்பி சென்றது.

இதையடுத்து லாரியை மடக்கி பிடிக்க காவலர் பிரபு இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றார். அப்போது லாரியை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலர் பிரபு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் காவல்துறையினர் பிரபுவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மது போதாயில் லாரி ஓட்டி வந்த பாஸ்கர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் குற்றவாளியை பிடிக்கும் பணியில் துணிச்சலாக ஈடுபட்டு உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபு குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 0

0

0