குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை : சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 1:51 pm
Appavu - Updatenews360
Quick Share

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு நிதிஉதவி திட்டம் ஆகியவற்றின் கீழ் 105 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.47 லட்சம் மதிப்பில் 840 கிராம் தங்கம், பட்டப்படிப்பு படித்த 89 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.44.5 லட்சம், 16 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்தில் உதவிகள் என 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் 832 தையல் எந்திரங்களையும் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: பெண்களை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினால் தான் நாடு முன்னேற்றம் அடையும். இதனால் தான் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தி பெண்களின் உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத் தொடரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 என்பது ஓசியும் இல்லை. இலவசமும் இல்லை. அது பெண்களுக்கான உரிமைத்தொகை. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மேயர் சரவண், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி மற்றும் பொன்முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 58

0

0