ஒரே நாளில் ரூ.33 லட்சம் வரி வசூல்: கோவை மாநகராட்சி வரி வசூல் மையங்களில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்..!!

Author: Rajesh
7 March 2022, 12:40 pm
Quick Share

கோவை: மாநகராட்சியில் உள்ள 21 வரி வசூல் மையங்களில் நேற்று ஒரே நாளில் 33 லட்சம் ரூபாய் வரியினங்கள் வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகராட்சிக்கு நடப்பு 2021-22ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்துக்கு, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, காலியிட வரி ஆகியவற்றை மக்கள் செலுத்தி வருகின்றனர்.

இதற்கென, 21 மாநகராட்சி வரி வசூல் மையங்கள் தினமும் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்கள் உடனடியாக வரி செலுத்தும் வசதிக்காக நேற்று முதல் வரும், 31ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும், வரி வசூல் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று, 21 வரி வசூல் மையங்களிலும், 33 லட்சம் ரூபாய் வரி வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகராட்சியில் நேற்று காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி என அனைத்து பிரிவிலும், 33 லட்சம் ரூபாயை பொது மக்கள் செலுத்தியுள்ளனர். tnurbanepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இணையதள முகவரி வாயிலாகவும் வரி செலுத்தலாம்’ என்றனர்.

Views: - 651

0

0