குமரியில் பிரபல தொழிலதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் பணம், நகை கொள்ளை : கைரேகைகளை அழித்ததால் போலீசார் திணறல்!!

29 January 2021, 2:42 pm
Kanya Theft - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தொழில் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 லட்சம் பணம் மற்றும் 13 சரன் நகையை கொள்ளயடித்த மர்மகும்பல் கைரேகைகளை தண்ணீர் விட்டு அழித்து சென்றுள்ளதால் போலீசார் திருடர்களை பிடிக்க திணறி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு செறுகுழி பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபரான கனகராஜ். இவர் குமரி மாவட்டம் முழுவதும் டெட்டால் மொத்த வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு மங்குளி பகுதியில் ஒரு கடையும் உள்ளது. இவர் கடந்த 27 ம் தேதி காலை மணிக்கு தனது குடும்பத்தினருடன் கோவில்பட்டியில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்து அங்கிருந்து வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் சென்றுவிட்டு நேற்று மாலை 6.45 மணிக்கு வீடு வந்தடைந்துள்ளார். அப்போது வீட்டின் கதவை அவரது மனைவி திறக்க முயன்ற போது கதவு உடைக்கப்பட்டு சாத்திய நிலையில் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கனகராஜ் மற்றும் குடும்பத்தார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறைக்கதவும் உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.

மேலும் பீரோவின் ரகசிய அறையும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர்கள் உள்ளே வைத்திருந்த பணம் நகை இருக்கிறதா என பார்த்த போது அந்த ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ருபாய் பணம் மற்றும் மனைவி மற்றும் மகளின் கம்மல், மோதிரம், வளையல், நெக்லெஸ் உட்பட 13 சவரன் நகையும் திருட்டு போய் இருந்தது.

இதனையடுத்து கனகராஜ் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளபட்டது.

கைரேகை நிபுணர்கள், திருடர்களால் கை பிடிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முயன்ற போது திருடர்கள் கைபிடித்த பகுதிகளை எல்லாம் தண்ணீரை விட்டு அழித்து சென்றுள்ளனர். இதனால் அவர்களால் கைரேகை எடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆனால் திருட்டு நடந்த வீடு இருக்கும் பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தபடாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு இதே போன்று கதவு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போன சம்பவம் நித்திரவிளை காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வீட்டில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் தான் இந்த திருட்டிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Views: - 20

0

0