பந்தயக்குதிரைகள் சாலைகளில் சுற்றினால் ரூ.50 ஆயிரம் அபராதம் : உரிமையாளர்களுக்கு நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை!!
16 September 2020, 3:23 pmநீலகிரி : உதகையில் பந்தயக் குதிரைகள் பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சாலைகளில் சுற்றி திரியும் குதிரைகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொது இடங்களில் குதிரைகளின் நடமாட்டத்தை தடுக்க நகராட்சி சார்பில் குதிரைகளின் உரிமையாளர்களை அழைத்து குதிரைகளை கணக்கெடுத்து டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இதில் விதிமுறைகளை மீறி நகரில் சுற்றித் திரியும் குதிரைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் சுற்றுலா தலங்களில் ஓய்வு பெற்ற பந்தயக் குதிரைகளை அதன் உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி சுற்றுலாப்பயணிகளுக்கு சவாரி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
உரிமையாளர்கள் இக்குதிரைகளை துன்புறுத்தி வருவதுடன் பராமரிப்பு செய்யாமல் தெருக்களில் சுற்றித் திரிவதால் மருத்துவ வசதி இன்றி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் ஓய்வு பெற்ற பந்தயக் குதிரைகளை பராமரிப்பு செய்யாமல் உரிமையாளர்கள் குதிரைகளை சாலைகளில் சுற்றித்திரிய விட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0
0