பாரிஸ் சிட்டி போல் பளபளக்கும் ஆர்.எஸ்.புரம் : செல்பி எடுத்து துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

24 February 2021, 8:41 pm
Quick Share

கோவை: ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ‘மாடல்’ சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘ஏஞ்சல் விங்க்’ செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று துவங்கி வைத்தார்.

ஆர்.எஸ் புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.27 கோடி மதிப்பில் ‘மாடல்’ சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முழுமையடைந்துள்ளன. அதோடு, டி.பி சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே நான்கு ரோடு சந்திப்பில் அசத்தலாக ‘பிரிட்டிஷ் டவர் கிளாக்’ அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், நான்கு சாலை சந்திப்பில் தார் சாலைக்கு பதிலாக ‘காபுல் ஸ்டோன்’ என்ற கற்கள் வட்ட வடிவில் பதிக்கப்பட்டுள்ளன.
அதே பகுதியில் ‘ஏஞ்சல் விங்க் செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது. தேவதை இறக்கை போன்ற இந்த தோற்றம் பொதுமக்களை கவர்ந்துள்ளது.

பாலிகார்பனேட் பொருட்கள் மூலமாக இந்த ஏஞ்சல் விங்க் பல வண்ணங்களில் மாறும் வகையில் லைட்டிங் வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. 8 அடி உயரம் 16 அகலத்துடன் பளபளப்பாக காணப்படும் இந்த தேவதை இறக்கையின் நடுவில் செல்போனில் போட்டோ எடுக்கும் வகையில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.‌ ‘பாரிஸ்’ நகரின் கட்டமைப்பில் டி.பி ரோடு பளபளப்பாக்க மாற்றப்பட்டுள்ளது.மக்கள் விரும்பும் லைட்டிங் வசதியுடன் கலர்புல் செல்பி போட்டோ ஏஞ்சல் விங்க் முன் எடுக்கலாம். இது கோவை மக்களின் புதிய ‘செல்பி ஸ்பார்ட் ‘ ஆக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

உக்கடம் பெரியகுளத்தில் ‘ஐ லவ் கோவை’ போல் ஏஞ்சல் செல்பி ஸ்பாட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.பி ரோடு முதல் காந்தி பார்க் வரை 1.6 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 மீட்டர் அகலத்தில் நடைபாதை பொலிவாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும் போது ஓய்வு எடுக்க வசதியாக நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.‌ ஆர்.எஸ் புரத்தின் பழைமை, பாரம்பரியம், புராதனம் போன்றவற்றை அடையாளம் காணும் வகையில் பழங்கால தோற்றத்தில் வீதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.‌ ஆர்.எஸ் புரம் பகுதியை உருவாக்கிய முக்கிய தலைவர்களின் விவரங்கள்‌ பொதுமக்களின் பார்வைக்காக வீதியோரங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.

மாடல் ரோடு கோவை நகர மக்களுக்கு ரோல் மாடல் பகுதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் சாலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார். மேலும், ‘ஏஞ்சல் விங்க்’ செல்பி ஸ்பாட்டில் முதல் முறையாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செல்பி எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஆறுக்குட்டி, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட டி.பி சாலையில் மாடல் சாலையின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. மாடல் சாலை சென்னையில் பாண்டிபஜாரில் திறக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, கோவையில் துவங்கப்பட்டுள்ளது. கோவையில் எண்ணற்ற பணிகளை செய்துள்ளோம். சாலைகள் விரிவுபடுத்தி, பாலங்கள் அமைத்து விபத்துக்களை குறைத்ததோடு, போக்குவரத்து நெரிசலையும் குறைத்துள்ளோம். விமான நிலைய விரிவாக்க பணிகள் துவங்கியுள்ளது. இந்தியாவிலேயே கோவையில் தான் அதிகம் வீடி கட்டி கொடுத்துள்ளோம்.

உக்கடம் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வரும் 27ம் தேதி திறப்பு விழா காணப்பட உள்ளது. ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது எதுவும் செய்யவில்லை. நான் 148 விருது வாங்கியுள்ளேன். பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். அதனால் தான் அவருக்கு கோபம். மல்டிலெவல் கார் பார்க்கிங் பயன்பாட்டிற்கு வர உள்ளது. சாலைகளில் வாகனங்களை நிறுத்தாமல் அங்கு நிறுத்தி சாலையை பராமரிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் பிறந்த நாளில் இந்த சாலை துவக்க விழா நடைபெற்றது பெருமை. கோவைக்கு சர்வதேச அளவிலான ஸ்டேடியம் மற்றும், விலங்கியல் பூங்கா விரிவாக்கம் பணிகள் விரைவில் துவங்கப்படும். சூயஸ் திட்டம் குறித்து அரசியல் செய்கின்றனர். மொத்த உரிமையும் மாநகராட்சிக்கு தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 1

1

0