ஊரக உள்ளாட்சி தேர்தல் : விழுப்புரத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.. போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2021, 10:31 am
Local Election -Updatenews360
Quick Share

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 745 பேரும், 372 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 8,574 பேரும் ஆக மொத்தம் 3,297 பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 10,873 பேர் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 1,569 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 919 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 475 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 65 பேரும் ஆக மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…

தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, தடையில்லா மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அதுபோல் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் தேர்தல் நிகழ்வுகளை முற்றிலும் கண்காணிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு நடைபெறுவதை வீடியோ மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க வாக்களிக்க வரும் பொதுமக்களை அங்குள்ள நுழைவுவாயில் முன்பு நிறுத்தி தெர்மல் ஸ்கேனர் கருவியின் மூலம் உடல்வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே வாக்குச்சாவடியின் வளாகத்திற்குள் செல்ல அனுமதிப்பார்கள்.

முக்கியமாக முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் அங்குள்ள வளாகத்தில் பொதுமக்களுக்கு சானிடைசர் திரவத்தை பயன்படுத்த வைத்த பிறகே வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அச்சமின்றி வாக்களிக்க , அசம்பாவிதம் இல்லாமல் இந்த தேர்தலை நடத்த மாவட்ட முழுவதும் 3600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

Views: - 350

0

0