பெண் தலை துண்டித்து கொடூரக் கொலை : பசுபதி பாண்டியனும்… தீராத பகையும்… திண்டுக்கல்லை உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
22 September 2021, 4:20 pm
Dindugal murder - updatenews360
Quick Share

திண்டுக்கல் அருகே பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் நந்தவன பட்டியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனராக இருந்த பசுபதிபாண்டியன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து குற்றவாளிகளில் ஒருவரான நந்தவனப்பட்டி பகுதியைச் சேர்ந்த நிர்மலா (60) என்பவரை இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், தலையை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனி டேவிட் நகர் அருகே இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், தலையை மட்டும் வெட்டி எடுத்துச் சென்று பசுபதி பாண்டியன் வீட்டில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார், நிர்மலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், நிர்மலாதேவியின் தலையையும் கைப்பற்றினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், அதில் தொடர்புடையவர்களை குறி வைத்து, பழிக்குப்பழியாக கொன்று குவிக்கும் சம்பவம் திண்டுக்கல் மட்டுமல்லாமல், தமிழகத்தை கொலை நடுங்கச் செய்துள்ளது.

Views: - 245

0

0